எதிர்வரும் 2 வார காலப்பகுதியில் பகிரங்க பொது மக்கள் வைபவங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வளங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (14) கொவிட் -19 என்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சி இதற்கு மேலதிகமாக தனிப்பட்ட ரீதியில் நடத்தப்படும் கட்சி மற்றும் கொண்டாட்டங்கள் முதலானவற்றை எதிர்வரும் 2 வார காலத்திற்கு நடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டுதலில் முன்னெடுத்துள்ளது.
பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் வைபவம் அல்லது கூட்டங்களுக்கு பொலிஸாரின் அனுமதி பெறப்படவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு அனுமதி வழங்க மாட்டார்கள். எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியாக அமைய வேண்டும்.
சர்வதேச ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை நாட்டில் முற்றாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக செயற்பட்டு வரும் தேசிய குழுவினரின் தீர்மானங்களுக்கு அமைய பொலிஸாருக்கும் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன், நாட்டு மக்களிடமும் நாம் இது தொடர்பில் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரேனா வைரஸ் உள்நாட்டில் ஏற்படவில்லை. தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களினாலேயே இந்த நோய் இங்கு பரவ ஆரம்பித்தது. இதனாலேயே இந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களை முதலாவதாக சுகாதார அதிகாரிகள் மூலம் கண்காணிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். இதனைத் தொடர்ந்து நாம் இவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்பொழுது மேற்கொண்டுள்ளோம்.
இதற்காக மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய முகாம்களையும் அமைத்தோம்; என்று தெரிவித்த அமைச்சர் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்; தெரிவித்தார்.