நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் (Newzealand) நாட்டின் கடலோரப் பகுதியில் 7.4 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடலோரப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களில் சிலர் வெளியேற்றப்பட்டு உயரமான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். நிலநடுக்கத்தால் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை. நியூசிலாந்து நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு சற்று நேரம் முன்பு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ட்விட்டரில் நியூசிலாந்து மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து சுனாமி அறிகுறிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். எனினும், தற்போது சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை முகமை தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை. தற்போதைய நிலவரத்தின் முதற்கட்ட ஆய்வின்படி, நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் தங்கள் இடத்தை விட்டு வெளியேறத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து கிழக்கு கடலோரப் பகுதியில் கிஸ்போர்ன் நகரில் இருந்து 710 கிலோமீட்டர் தொலைவில் கெர்மடெக் தீவுகள் அருகே நியூசிலாந்து நேரப்படி நள்ளிரவு சரியாக 12.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.