நேற்றைய தினம் இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பரஸ்பர நன்மையுடன் கூடிய நிலையான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு குறித்து இலங்கை ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி கூறியதாவது குறிப்பாக பிரிவினைவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பிறகு உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு சீனா பெரிதும் உதவியது. அதில் குறிப்பாக சிலதை கூறினார்: கொழும்பு துறைமுக நகரம், ஹம்பான்தோட்டை துறைமுகம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகியவையாகும்.

மேலும் இலங்கை அதன் அபிவிருத்தி முயற்சிகளில் வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக முதலீட்டை ஈர்ப்பதற்கே முன்னுரிமை அளித்துள்ளது. “எமது நாட்டில் பரந்த முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. விவசாயம், தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அவற்றில் முக்கியமானவை. இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 30 வீதமானவர்களின் வாழ்வாதாரம் கிராமிய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது.

கடந்த சில தசாப்தங்களாக சீனா அடைந்துள்ள கிராமிய அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தி கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எனது முக்கிய குறிக்கோள்.

அதைச் செய்ய எங்களுக்கு உதவுங்கள்” என்று ஜனாதிபதி அவர்கள் புதிய சீன தூதுவரிடம் தெரிவித்தார்.

Leave a Reply