இன்றைய தேதியில் கரோனாவை ஒழிக்க உலகம் தேடும் ஒரே ஆயுதம், கரோனா தடுப்பூசி.இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரோனா வைரஸ் மரபணு வரிசையை முதன்முதலாக சீனா கண்டுபிடித்து உலக ஆய்வாளர்களுக்குக் காண்பித்ததுமே, கரோனாவுக்குரிய தடுப்பூசியைக் கண்டுபிடிக்க வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்தும் களத்தில் இறங்கின.

கடந்த 6 மாத ஆராய்ச்சிகளில் உலகில் இதுவரை 145 கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு ஆய்வுக் கட்டங்களில் இருப்பதாகவும், அவற்றில் 19 தடுப்பூசிகள் மனிதர்களுக்குச் சோதனை ஓட்டத்தில் கொடுக்கப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அந்தத் தடுப்பூசிகளின் கள நிலவரங்கள் சில இங்கே….

கோவேக்ஸின் – இந்தியத் தடுப்பு மருந்து

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய நச்சுயிரியல் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ‘கோவேக்ஸின்’ தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதை பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு தயாராகி வருகிறது.

இந்தியாவில் பரவும் நாவல் கரோனா வைரஸ் கிருமி இனத்தைக் கொண்டு இந்தத் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுவது இதன் சிறப்புத் தன்மை. கரோனா கிருமிகளின் வீரியத்தை முழுவதுமாகவே அழித்து (Inactivated vaccine) அவற்றின் ‘ஸ்பைக்’ புரதத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து இது.

இதை எடுத்துக் கொண்டவர்களுக்கு கரோனா கிருமிகளை எதிர்த்துப் போராடும் எதிர் அணுக்கள் (Antibodies) அவர்கள் ரத்தத்தில் உற்பத்தி ஆகிவிடும். அதன் பிறகு அவர்கள் உடலில் கரோனா கிருமிகள் புகுந்தால், இந்த எதிரணுக்கள் அந்தக் கிருமிகளை அழித்து கரோனா வராமல் தடுத்துவிடும்.

இந்த தடுப்பூசி விலங்குகளுக்குக் கொடுத்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது. அடுத்த கட்டமாக மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை மேற்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (DCGI) அனுமதி அளித்துள்ளது. இந்த ஆய்வுக்கான 12 மையங்களில் சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையும் ஒன்று.

இப்போது ஏற்பட்டிருக்கும் மருத்துவ சர்ச்சை என்னவென்றால், மொத்தமுள்ள ஆராய்ச்சிக் கட்டங்களில் இந்தத் தடுப்பு மருந்து முதல் நிலையில்தான் உள்ளது. இன்னும் 3 கட்ட மனிதச் சோதனைகளைக் கடக்க வேண்டும். அதற்கு ஆரோக்கியமிக்க தன்னார்வலர்களைத் தேடுவதில் தொடங்கி பல கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ள அவகாசம் தேவைப்படும். அப்போதுதான் இதன் தடுப்புத் திறன், நோய்ப் பாதுகாப்புத் திறன் மற்றும் பக்க விளைவுகள் முழுவதுமாகத் தெரிய வரும்.

ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இந்த மருந்தை ஆகஸ்ட் 15-ல் நாட்டில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று அவசரப்படுத்தியதும் பிறகு பின்வாங்கியதும் இதன் பாதுகாப்புத் தன்மையில் பல சந்தேகங்களை எழுப்புகிறது. கரோனாவின் பிடியில் இருந்து மக்களை உடனடியாகக் காக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் அவசரப் பயன்பாட்டுக்கு சில நெறிமுறைகளைத் தளர்த்தினாலும், தற்போதைய தன்னார்வலர்கள், அடுத்ததாகத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்பவர்களின் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, இது அடுத்த ஆண்டில் வருவதற்குதான் அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆமதாபாத்தில் ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் தாம் கண்டுபிடித்துள்ள ZyCov-D கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் இரண்டு கட்டங்களாகச் சோதித்து அறிய இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி பெற்றுள்ளது.

அமெரிக்க தடுப்பூசி

அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி இது. இதிலுள்ள ‘mRNA’ நகலானது கரோனா வைரஸின் மரபணு வரிசையைப் பெற்றிருப்பதால், மனித உடலுக்குள் இதைச் செலுத்தும் போது, தடுப்பாற்றல் மண்டலத்தில் உள்ள எதிர் அணுக்கள் இதை கரோனா வைரஸாகப் பாவித்துக் கொள்கின்றன. அடுத்தமுறை கரோனா தாக்கினால், அதை அடையாளம் கண்டு அழித்து கரோனாவுக்கு முடிவு கட்டிவிடுகிறது.

இந்தத் தடுப்பூசி முதல் 2 கட்ட ஆய்வுகளைக் கடந்துவிட்டது. இந்த மாதம் அது 3-ம் கட்ட கள ஆய்வுக்குச் செல்கிறது. இதேபோல் ஜெர்மனியில் பயோஎன்டெக், நியூயார்க்கில் பைசர், சீனாவின் ஃபோஸம் பார்மா மூன்றும் இணைந்து மற்றொரு ‘mRNA’ தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இதுவும் 3-ம் கட்ட ஆய்வில் உள்ளது.

இங்கிலாந்து தடுப்பூசி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனமும் இணைந்து ChAdOx1 எனும் தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இதுசிம்பன்ஸி குரங்கின் அடினோ வைரஸ் மரபணுவில் கரோனா வைரஸ் ‘ஸ்பைக்’ புரதத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. இதன் முதல்2 கட்ட ஆய்வுகள் இங்கிலாந்தில் முடிந்த நிலையில் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இப்போது 3-ம் கட்ட ஆய்வில் உள்ளது.

பூனாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து AZD1222 தடுப்பூசியைத் தயாரிக்கின்றன. இது இங்கிலாந்து, பிரேசில் மற்றும்தென் ஆப்பிரிக்காவில் 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

சீனத் தடுப்பூசி

சீனாவின் கான்சினோ பயாலாஜிக்ஸ் நிறுவனம்அடினோ வைரஸ் மரபணுவைப் பயன்படுத்தி Ad5-nCoV எனும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இதுவும் மூன்றாம் கட்ட கள ஆய்வில் உள்ளது.

இதுபோல் சீனாவின் சினோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள வீரியம் அழிக்கப்பட்ட கிருமிகள் கொண்ட கரோனா தடுப்பூசி ஒன்றும் 3-ம் கட்ட ஆய்வில் உள்ளது. சீனாவில் ‘சைனோவேக் பயோடெக்’ தனியார் நிறுவனம் ‘கரோனோவேக்’ தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இது பிரேசிலில் 3-ம் கட்ட ஆய்வில் உள்ளது.

இப்போதைக்கு நம்பிக்கையூட்டும் கரோனா தடுப்பூசிகளாக இவைதான் களத்தில் முதல் வரிசையில் நிற்கின்றன. இவற்றில் உலக சந்தைக்கு முந்தும் முதல் கரோனா தடுப்பூசியாக எது இருக்கப்போகிறது? புத்தாண்டில் தெரிந்துவிடும். அதுவரை அரசு சொல்லும் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி கரோனாவை முறியடிப்போம்.

புதிய தடுப்பூசி ஆய்வு நிலைகள்

புதிதாக ஒரு தடுப்பூசியை வடிவமைத்த பிறகு முதலில் அதை சுண்டெலிகள் மற்றும் குரங்குகளுக்குக் கொடுத்துச் சோதிக்க வேண்டும். இது ‘மனித சோதனை முந்தைய நிலை’ (Pre-clinical stage) எனப்படும். இதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக மனிதர்களுக்குக் கொடுத்துப் பார்க்கும் சோதனைகளில் இறங்க வேண்டும்.

நிலை-1 

குறிப்பிட்ட வயதுள்ளவர்களில் 30 பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசியைப் போட்டு சோதிக்கும் நிலை இது. தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மை, நோய் தடுக்கும் தன்மை (Immunogenicity), பயனாளியின் ரத்தத்தில் நோய்க் கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கு எவ்வளவு எதிர் அணுக் களை (Antibodies) உற்பத்தி செய்கின்றன, அவை உடலில் ஏற்கனவே இருக்கும் எதிர் அணுக்களுக்குப் பாதகமாக இருக்குமா, சாதகமாக இருக்குமா ஆகிய விவரங்கள் இந்த நிலையில் அறியப்படும்.

நிலை-2 

குழந்தைகள், பெரியவர்கள், நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளவர்கள் என 3 குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் சுமார் 100 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தடுப்பூசியைப் போட்டு சோதிப்பார்கள். தடுப்பூசியின் இயக்கம், தடுப்பூசியின் அளவு, எந்த வழியில் அதைக் கொடுப்பது, வயதுக்கு ஏற்ற பாதுகாப்பு தருகிறதா ஆகிய விவரங்கள் இந்த நிலையில் அறியப்படும்.

நிலை-3 

நாட்டில் பல்வேறு இடங்களில் குறிப்பாக நோய்த்தொற்று பரவும் இடங்களில் குழுவுக்கு சுமார் ஆயிரம் தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து – இரு குழுக்களாகப் பிரித்துக் கொள்வார்கள். ஒரு குழுவுக்கு தடுப்பூசி போடுவார்கள். மற்றொரு குழுவுக்கு ‘விளைவில்லா மருந்து’ (Placebo) கொடுப்பார்கள். இது அவர்களுக்குத் தெரியாது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, இரு குழுவினருக்கும் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை ஒப்பிடுவார்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோய்ப் பாதுகாப்பு கிடைத்திருக்கிறதா, தடுப்பூசி போதிய திறன் பெற்றுள்ளதா, பக்கவிளைவுகளைத் தருகிறதா ஆகிய விவரங்கள் அப்போது அறியப்படும்.

நிலை-4 

தடுப்பூசி தயாரிப்பதற்கு உரிமம் பெறுவதற்கு முந்தைய நிலை இது. இந்த நிலையில் நோய்த் தொற்றும் இடங்களில் நோய் பரவ வாய்ப்புள்ள எல்லோருக்கும் தடுப்பூசி போட்டுச் சோதிப்பார்கள். இந்த நிலையில் முந்தைய 3 நிலைகளில் ஏற்படாத எதிர்பாராத விளைவுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை அறிவார்கள். ஓராண்டு காலத்துக்கு அவர்கள் உடலில் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்று தொடர்ந்து சோதிப்பார்கள். புதிய தடுப்பூசி தருகிற முழுமையான பாதுகாப்பும் அதன் திறனும் இந்த இறுதி நிலையில்தான் தெரிய வரும்.

உரிமம் கொடுத்தல் 

மேற்சொன்ன 4 நிலைகளின் ஆய்வு முடிவு தரவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடமும் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடமும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த 2 நிறுவனங்களும் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு அந்த ஆராய்ச்சி முடிவுகள் உடன்பட்டதாக இருந்தால் அந்தத் தடுப்பூசியைத் தயாரிக்க உரிமம் வழங்கப்படும். அதன் பிறகும்கூட தடுப்பு மருந்தை மொத்தமாக தயாரிக்கும் போது அதன் பாதுகாப்புத் தன்மையை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் அது மக்கள் பயன்பாட்டுக்கு வரமுடியும். மக்களை உடனடியாகக் காக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் அவசரப் பயன்பாட்டுக்கு சில நெறிமுறைகளைத் தளர்த்தினாலும், தற்போதைய தன்னார்வலர்கள், அடுத்ததாகத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்பவர்களின் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்..

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,(Indu Tamil thisai)

By Admin

Leave a Reply