பியோங்யாங்: வட – தென் கொரியா எல்லையில் கேசாங் நகரில் இருந்த, இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 1950களில் நடந்த கொரியப் போரின் போது வட கொரியாவும், தென் கொரியாவும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில், கேசாங் நகரில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதி உள்ளது. அங்கு, இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் உள்ளது. கடந்த 2018ல் இரு நாடுகளும் இடையே பேச்சு வார்த்தை துவங்கிய பின், இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் மறுசீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னையும், அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை, சில தென் கொரியர்கள், வட கொரியா நோக்கிப் பறக்க விட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. ‘வட கொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் தென் கொரியாவிலிருந்து அனுப்பப்படுவது தடுக்கப்படும்’ என, 2018ல் இரு நாட்டுத் தலைவர்கள் இடையே நடந்த உச்சி மாநாட்டில் தென் கொரியா உறுதியளித்தது. ஆனால், சமீபத்தில் பலூன் பிரசுரங்கள் வட கொரிய எல்லைக்கு வந்துள்ளன.
இதனால் கடும் கோபமடைந்த, வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங், ‘ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழையத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ராணுவத்துக்கு உடுத்தவிட்டுள்ளோம். கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்படும்’ என, சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், கேசாங் நகரில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் இருக்கும் இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிகளுக்குள் தங்கள் ராணுவத்தை அனுப்ப, ஒரு செயல்திட்டத்தை ஆராய்ந்து வருவதாக வட கொரிய ராணுவம் இன்று (16ம் தேதி) கூறியுள்ளது. மேலும், அரசு உத்தரவுகளை செயல்படுத்த உயர் எச்சரிக்கையுடன் தயாராக இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவிலிருந்து தப்பித்து தென் கொரியா வந்தவர்களைக் கொண்ட குழு தான், தென் கொரிய எல்லையிலிருந்து, வட கொரிய அரசை விமர்சிக்கும் பிரசுரங்கள், உணவு, செய்தித் தாள்கள், கொரிய நாடகங்கள், வானொலி போன்றவற்றைக் கொண்ட பெரிய பலூன்களை வட கொரியா நோக்கி அனுப்பி வருகிறது. அந்த குழுவின் செயல்களால், எல்லையில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், அந்த குழுக்களைத் தடுக்க தென் கொரிய அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By : Dinamalar

By Admin

Leave a Reply