1960 களில் தம்புள்ளையில் கம்சபா (கிராம சபை) நிர்வாக முறையே அமுலிலிருந்து பின்பு பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் உள்வாங்கப்பட்டது. இக் கால கட்டங்களில் கட்டிட நிர்மாணத்திற்கு அனுமதி பெற்றுக்கொள்ளும் நடைமுறை இருக்கவில்லை.
இக்கால எல்லையில் இங்கு நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணங்களுக்கு எவரும் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்பதை அறியத் தருகிறோம் என வக்பு சபையும், தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகமும் தம்புள்ளை மாநகர ஆணையாளர் வி.எம்.ஆர்.பி.தசநாயக்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளன.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தம்புள்ளை மாநகர ஆணையாளரினால் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அவ்வறிவித்தலில் “1982 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 8A (1) பிரிவை மீறி உங்களால் அதிகாரசபையிடமிருந்து உரிய அனுமதி பெற்றுக்கொள்ளாது கண்டிவீதி தம்புள்ளையில் வணக்கஸ்தலமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2021.02.24 ஆம் திகதி அல்லது அதற்கு முன்பு நிர்மாணத்திற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதி தொடர்பான ஆவணங்கள் இருப்பின் தம்புள்ளை மாநகரசபை பொறியியலாளரிடம் சமர்ப்பிக்கும்படி இத்தால் அறிவிக்கின்றேன்.
அவ்வாறு அறிவிக்கப்படாவிட்டால் எந்த அறிவிப்புமின்றி மேற்கூறப்பட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 28A (3) பிரிவின் கீழ் நீதிமன்ற உத்தரவினைப் பெற்று சட்டவிரோத நிர்மாணம் அகற்றப்படும் என அறியத்தருகிறேன்’. எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிவித்தலுக்கே வக்பு சபையும், பள்ளிவாசல் நிர்வாகமும் மேற்குறிப்பிட்டவாறு பதிலை வழங்கியுள்ளன.
பதில் கடிதங்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தம்புள்ளை பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் இருந்த சந்தர்ப்பத்தில் இப்பள்ளிவாசலை பிரதேச சபை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலையிட்டு பலகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதை ஞாபகப்படுத்துகிறோம் என பள்ளிவாசல் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
அத்தோடு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பொறுப்பாகவுள்ள கலாசார அமைச்சின் கீழ் இயங்கிவரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இப்பள்ளிவாசல் R/1990/MT/51 எனும் இலக்கத்தின் கீழ் பள்ளிவாசலாக பதிவு செய்யப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இதன் பிறகு எமது பள்ளிவாசலை வணக்கமடுவம் என தொடர்பு கொள்ளாது ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் என்ற பெயரில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம். மேலதிக விபரங்கள் தேவைப்படின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரிடம் பெற்றுக்கொள்ளும்படி வினயமாக தெரிவித்துக்கொள்கிறோம் என பள்ளிவாசல் நிர்வாகம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
From : Vidivelli