காங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் தங்க மலை கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கை நிறைய தங்கத்தை அள்ளி எடுத்து இருக்கிறார்கள். அரசே தலையிட்டு, அப்பகுதியில் சுரங்கப் பணிகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

சமீபத்தில், காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் பிராவா கிராமத்தில் தங்க மலை கண்டுபிடிக்கப்பட்டது என பிபிசி பிட்ஜின் சேவையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மலையின் 60 – 90 சதவீதம் தங்கமாக இருக்கலாம் என அச்சேவையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த கிராமம் புகாவாவில் இருந்து வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

பொதுவாக காங்கோ நாடு இயற்கை வளமிக்கது. இந்நாட்டில் தங்கம், தாமிரம், கோபால்ட், வைரம் என பல கனிம மற்றும் கரிம வளங்கள் நிறைந்திருக்கின்றன.

யாரையும் முறையாக பணியில் அமர்த்தாமல் தங்க சுரங்கங்களில் தங்களிடம் இருக்கும் கருவிகளை வைத்து தங்கத்தை எடுப்பது, காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் மிகவும் சகஜமானது.

எனவே தங்க மலை செய்தியைக் கேள்விப்பட்டு பலரும் பிராவா கிராமத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். தங்களால் முடிந்த வரை தங்கத்தை அள்ளி எடுத்துக் கொண்டனர்.

மேலே இருக்கும் காணொளியில் தங்கம் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்ட மலைப் பகுதியில், மக்கள் மண்ணை வெட்டி எடுப்பதையும், அதை சுத்தம் செய்து தங்கத்தை பிரித்தெடுப்பதையும் பார்க்க முடிகிறது. மக்கள் மண்ணைக் கழுவி சுத்தம் செய்ய செய்ய தங்கம் கிடைக்கிறது. 

மக்கள் எடுத்த தங்கத்தை மீண்டும் பறிமுதல் செய்ய, காங்கோ அரசு அப்பகுதிக்கு காவலர்களை அனுப்பி இருப்பதாக ராய்டர்ஸ் முகமையில் செய்தி வெளியாகி இருக்கிறது.

தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி சுமார் 50 கிலோமீட்டருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதாக தெற்கு கிவு சுரங்க அமைச்சர் வெனன்ட் புருமே முஹிகிர்வா கூறினார்.

சுரங்கப் பணி மேற்கொள்பவர்கள், வர்த்தகர்கள், காங்கோ ஜனநாயக குடியரசின்ஆயுதப் படையினர் (FARDC) அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். மேற்கொண்டு வழிகாட்டுதல் வரும் வரை சுரங்கப் பணிகளில் ஈடுபடக் கூடாது என திங்கட்கிழமை ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெற்கு கிவு சுரங்க அமைச்சர் முஹிகிர்வா உறுதி செய்தார் என்கிறது ராய்டர்ஸ் செய்தி முகமை.

வீடியோ இதோ!

https://twitter.com/AhmadAlgohbary/status/1366803747062624261?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1366803747062624261%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-22382003492355572226.ampproject.net%2F2103020156002%2Fframe.html

காங்கோ சுரங்கச் சட்டங்களின் படி, காங்கோ ஆயுதப் படையினர் சுரங்கப் பகுதிகளில் இருக்கக் கூடாது. இந்த முறை சுரங்கப் பகுதியில் ஆயுதப் படையினர் இருந்தது தான் சட்டம் ஒழுங்கு குழப்பங்களுக்குக் காரணம் என அவ்வுத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

காங்கோ நாட்டில் இருந்து எடுக்கப்படும் தங்கம் முழுமையாக குறிப்பிடப்பட்டு அரசு கவனத்துக்கு வருவதில்லை. காங்கோவின் கிழக்குப் பகுதியில் இருப்பவர்களால், உலகின் தங்க விநியோகச் சங்கிலியில் டன் கணக்கில் தங்கம் கடத்தப்படுவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் காங்கோ நிபுணர்கள் குழு கடந்த ஆண்டு சுட்டிக்காட்டியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரு அவுன்ஸ் சர்வதேச ஸ்பாட் தங்கத்தின் விலை சுமார் 1,690 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை சுமார் 4,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 4,200 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Source: BBC News

By Admin

Leave a Reply