கொரோனா வைரஸ் காரணமாக சில அரசாங்க வேலைகள் மற்றும் சில தனியார் நிறுவன வேலைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கையில் ஒரேநாளில் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் சேவை இன்று முதல் நாளாந்தம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க ஒவ்வொரு நாளும் 300 தேசிய அடையாள அட்டைகள் வினியோகிக்கப்படும்.
கொழும்பு பத்தரமுல்லை ஆட்பதிவுத் திணைக்களத்தில் 250 தேசிய அடையாள அட்டைகளும் மேலும் காலியில் அமைந்துள்ள கிளையில் 50 தேசிய அடையாள அட்டைகளும் வினியோகிக்கப்படும்.
தேசிய அடையாள அட்டையை ஒரேநாளில் பெற்றுக்கொள்ள இருப்பவர்கள் கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகை தர உகந்த நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி இலக்கமொன்றையும் பெற்றுக்கொண்டு வருகை தந்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.