இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்வு பெற்ற பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் தொழில் ரீதியான உரிமைகள் மற்றும் தொழிலின் பாதுகாப்புக்காக தமது ஒன்றியம் கட்சி பேதமின்றி முன்னிற்பதாகவும், அவருக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவதாவும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அறிவிக்கை வெளாயிட்டது.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பணிப்பாளராக பணியாற்றிய பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் நியமனத்துக்கு சவால் விடுப்பதை கண்டிப்பதாக ஒன்றியத்தின் தலைவி ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட்19 நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்ன மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியுமான குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் நியமனம் தொடர்பில் எமது ஒன்றியம் மிக்க மகிழ்ச்சி அடைந்ததுடன், அது ஆண்களை பெரும்பான்மையாக கொண்ட பொலிஸ் திணைக்களம் போன்ற நிறுவனமொன்றில் பெண் ஒருவர் உயர் பதவியை அடைவது ஆண் – பெண் சமத்துவத்துக்கு பங்களிப்பு செய்வதாக கருதுவதாகவும் ஒன்றியத்தின் தலைவி குறிப்பிட்டார்.

எனினும், அவருக்கு எதிராக எழுந்துள்ள நிலைமை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிடும் அதேவேளை, இலங்கையில் பெண்களை பொலிஸ் சேவைக்கு இணைத்துக்கொள்வதாயின் அவர்களுக்கு தமது பதவி உயர்வுகளை முறையாகப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்க வேண்டுமென தான் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இங்கு சுட்டிக்காட்டினார்.

இவ்வளவு முன்னேற்றமடைந்த உலகில் பெண் என்ற ஒரு காரணத்தினால் ஏதாவதொரு துறையில் உயர்வடைவதற்கான சந்தர்ப்பத்தை பறிக்க முயற்சிப்பது நியாயமற்றதென பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வலியுறுத்தினர். பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பதவியை சவாலுக்குட்படுத்தி சிலர் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை பாராளுமன்றத்திலுள்ள அனைத்து பெண் உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி கண்டிப்பதாகவும், அதற்கு எதிராக இந்நாட்டின் அனைத்து பெண்களும், தமது மகள்மாரின் வெற்றியை எதிர்பார்த்துள்ள அனைத்து பெற்றோர்களும் ஒன்றுபட வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உப தலைவி திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

இதேவேளை, பிம்ஷானி ஜாசிங்காரச்சி தனது கடமையை சரியான முறையில் செய்ததால் அவருக்கான பதவி உயர்வை பெற்றுக்கொள்வதற்கு எதிராக இந்நாட்டின் ஆண்கள் சமூகம் செயற்படுவது அதிருப்தியானதாகும் என இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உப தலைவி ரோஹிணி விஜேரத்ன குறிப்பிட்டார்.

Leave a Reply