கட்சிகள் மட்டுமே தேர்தல் அலுவலகங்களை அமைக்கலாம். வேட்பாளர்கள் தனி அலுவலகங்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களிலெல்லாம் அமைக்க முடியாது இது தொடர்பான கட்சிகளின் கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று புதன்கிழமை கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக்குழுக்களின் முன்னிலை வேட்பாளர்களுடனான சந்திப்பை நடாத்தியது. இதன்போது தேர்தல் விதிகளை கட்சிகளும் வேட்பாளர்களும் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறத்தப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான சட்டத்தரணி நளின் அபேசேகர, பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரட்னாயக்க ஆகியோரடங்கிய குழுவினர் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சை குழுக்களின் பிரதானிகளுக்கு தேர்தல் குறித்து தெளிவுபடுத்தினர்.
கொரோனா நோய்த்தொற்று இந்தத் தேர்தலுக்கு சவாலாகக் காணப்படுகின்ற போதும் அதற்கு முகம்கொடுத்து தேர்தலை நடத்த ஆணைக்குழு தீர்மானித்ததாகத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,தேர்தலை நேர்மையாக நடத்தி முடிக்க சகல தரப்பினரையும் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொன்டார்.